3வது நாளாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; நடந்தே அலுவலகம் செல்லும் பணியாளர்கள்

புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஒட்டி, இன்று மூன்றாவது நாளாகவும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் பயணியர் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானோர், நடந்தே தங்களின் அலுவலகம், பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல நேர்ந்தது.

டில்லி, ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கும் நாளில், போராட்டக்காரர்கள் பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய டில்லியில் பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.

இதனால், இன்று மூன்றாவது நாளாக மத்திய டில்லியில் உள்ள 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. லோக் கல்யாண் மார்க், ராஜிவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ., டில்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம் மற்றும் ஜண்டேவாலன் ஆகிய நிலையங்கள் இன்றும் மூன்றாவது நாளாக மூடப்பட்டன.

அடுத்த அறிவிப்பு வரும் வரை, புதுடில்லி மெட்ரோ நிலையமும் மூடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தை, ரயில்களை மாற்றிக் கொள்வதற்கு பயணியர் பயன்படுத்தினர். தற்போது, இந்த நிலையமும் மூடப்பட்டதால், பயணியர் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

‘எல்லோ லைன்’ மற்றும் ‘விமான நிலைய விரைவு வழித்தடம்’ ஆகியவற்றை, புதுடில்லி மெட்ரோ நிலையம் இணைக்கிறது. இதனால், ரயில் மாறி செல்வோர், மாற்றி வழி தெரியாமல் திகைத்தனர். அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் பயணியர் இதனால் பெரிதும் சிரமம் அடைந்தனர். வாடகைக்கார்களில் கட்டணம் கணிசமாக அதிகரித்தது.

சாலைவழியே செல்வோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்ததால், சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனால், வாகனங்களில் செல்வோரும் அவதிப்பட்டனர். வாடகைக்கார், ஆட்டோ கிடைக்காமல், பெரும்பாலானோர் நடந்தே, தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். இதனால், அலுவலகம் செல்வோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணியர் வெகு தாமதமாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக சென்றடைய நேர்ந்தது.

‘மெட்ரோ ரயில்நிலையங்களை மூடுவதற்கு பதிலாக, புதுடில்லி பகுதியில் ஏன் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கக்கூடாது; மக்களை அலுவலகத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்துவது, அதே நேரம் அவர்கள் பணியிடத்தை அடைவதற்கான வழிகளைத் தடுத்து துன்புறுத்துவது என்ன ஒரு வக்கிரமான செயல்’ என்று, சமூகவலைதளங்களில் பயணியர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நிலையங்கள் மூடப்படுவதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து முடக்கத்திற்கு எதிர்ப்பு

‘மக்களுக்கான பொது போக்குவரத்தை முடக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று, ‘பொது போக்குவரத்து மன்றம்’ என்ற அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள், தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்து சேவையை இழக்க நேரிடுவது ஒருபோதும் நிகழக்கூடாது. ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தைக் காரணம் காட்டி, மெட்ரோ நிலையங்களை மூடும் முடிவு மிகுந்த கவலையளிக்கிறது. ஜனநாயக ரீதியிலான கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதற்கு, பொதுப் போக்குவரத்தை முடக்குவது ஒருபோதும் தீர்வு ஏற்படுத்தாது. இது லட்சக்கணக்கான பயணியருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, அமைதியான போராட்டத்திற்கும், அன்றாட வாழ்க்கைக்கும் தேவையற்ற தடைகளை உருவாக்குகின்றன. பொதுப் போக்குவரத்தை முடக்காமலே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொது போக்குவரத்து சேவையில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை வெளிப்படையாகவும், உரிய நேரத்திலும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link