புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு பொறுப்பு ஏற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கி உள்ளன. டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினர் கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசியத் தேர்வு முகமையானது நீட் தேர்வு மட்டுமல்லாமல், கியூட் யுஜிசி நெட், ஜேஇஇ மெயின் தேர்வையும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளை சீரமைப்பது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தேசியத் தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை முற்றிலும் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் நடந்து உள்ளதாகவும், அவர்களில் சிலர் மீது சட்டம் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
