மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு ராஜினாமா; ஜனாதிபதி ஏற்பு

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு. இவர் இன்று திடீரென தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஷ்டிரபதி பவன் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

இந்திய அரசியலமைப்பு 75வது பிரிவு (2)வது உட்பிரிவின்கீழ் பிரதமர் பரிந்துரையின் பேரில் மத்திய அமைச்சரவையில் இருந்து ரவ்நீத்சிங் பிட்டு விலகும் முடிவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரவ்நீத்சிங் பிட்டுவின் ராஜினாமாவுக்கான உரிய காரணங்கள் எதுவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், பஞ்சாப் மாநில அரசியலில் கவனம் செலுத்தும் பொருட்டு அவர் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு செல்லும் வகையில் அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சில நாட்கள் முன்னதாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு, ரவ்நீத்சிங் பிட்டு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்களில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்றும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

Source link