– நமது சிறப்பு நிருபர் –
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடு முழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வினாத்தாள்களை கசிய விடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாளை மறுநாள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
‘நீட்’ எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியின் ஜந்தர் மந்தரில், 20 நாட்களுக்கும் மேல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருத்தம்
சமீபத்தில் பார்லிமென்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்கள் மீது, பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியதால் விவகாரம் பூதாகரமானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘வினாத்தாள் கசிவு முறைகேடுகளை விசாரிக்க, பிரத்யேகமாக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்’ என, உறுதி அளித்தார்.
இந்த சூழலில், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், வினாத்தாள் கசிவை தடுக்க, ஏற்கனவே உள்ள, ‘பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் – 2024-‘ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திருத்த மசோதா, லோக்சபாவில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே நிறைவேற்றப்பட உள்ளது.
கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மட்டுமே தெரிவித்தார் .
கடந்த 2024-ல், ‘நீட், நெட்’ வினாத்தாள்கள் கசிந்ததை அடுத்து, பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் – 2024 அமல்படுத்தப்பட்டது. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வாணை யம், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை.
ரயில்வே மற்றும் வங்கி தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், குற்றங்களை ஜாமினில் வெளிவராத குற்றங்களாக கருதுகிறது.
மேலும், குற்றங்களை பொறுத்து, 3 – 10 ஆண்டு கள் வரை சிறை தண்டனையும், குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்க வழி செய்கிறது.
இந்நிலையில், ‘நீட்’ வினாத்தாள் கசிவு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விரைவு நீதிமன்றம்
அதன்படி, வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண, மாநிலங்கள் முழுதும் பிரத்யேக விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நீதிமன்றங்கள், வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்.
மேலும், வினாத்தாளை கசிய விடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
ஏற்கனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளுக்கு, கூடுதல் மற்றும் கடுமையான சிறை தண்டனைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும்!
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கை, எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி நிறைவேற்ற வேண்டும். மேலும், போலீசாரால் தாக்கப்பட்ட மாணவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
-சவுரவ் தாஸ், செய்தி தொடர்பாளர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
