ராஜினாமாவை அறிவித்த மத்திய அமைச்சர் -அரசியலில் பரபரப்பு

 

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவனீத் சிங் பிட்டு தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்ட இந்த ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தத் திடீர் அரசியல் திருப்பம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மிக முக்கியமான அரசியல் முகமாக அறியப்படுபவர் ரவனீத் சிங் பிட்டு. இவர் கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் லூதியானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருந்து கொண்டே மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. லூதியானா பகுதியில் செல்வாக்கு மிக்க நபராகவும், பாஜகவின் பஞ்சாப் மாநில முகமாகவும் மாறிவரும் ரவனீத் சிங்கை, அங்கு முழுநேரக் கட்சிப் பணிகளில் களமிறக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பியந்த் சிங்கின் பேரன் என்பதால், இவருடைய பாரம்பரிய அரசியல் பின்னணி பாஜகவிற்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக இவரை முன்வைத்தே தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவரை ‘துரோகி’ என்று விமர்சித்துப் பேசியது தேசிய அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதன் மூலம், பஞ்சாப் மாநில தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Source link