‘ராஜா முன்னாலே, ராணி பின்னாலே’ – சூர்யா குரலில் வெளியான கொண்டாட்டப் பாடல்!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சூர்யா 46வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படம் 20 வயதுள்ள மமிதா பைஜூ 40 வயது மேல் இருக்கும் சூர்யாவை காதலிக்க, அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைக் குறிப்பிடும் வகையில் சமீபத்தில் படத்தின் முதல் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகியிருந்தது. காதல் பாடலாக அமைந்திருந்த இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூர்யா இப்படத்தில் ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளதாக ஜிவி பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்தார். மேலும் இப்பாடலை கென் கருணாஸ் எழுதியுள்ளதாக தெரிவித்தார். பின்பு அப்பாடல் படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவரும் என அண்மையில் பதிவிட்டிருந்தார். 

அதன்படி இன்று வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. ‘தி வெட்டிங் சாங்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த லிரிக் வீடியோவில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் சூர்யாவும் மமிதா பைஜூவும் மணமக்களை வாழ்த்துவது போல் ஒரு கொண்டாட்ட பாடலாக அமைந்துள்ளது. அதை குறிக்கும் வகையில் ‘ராஜா முன்னாலே ராணி பின்னாலே, ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்க இரண்டு மொழிகளிலுமே சூர்யா பாடியுள்ளார். தமிழ் வெர்ஷனை கென் கருணாஸ் எழுதியிருக்கத் தெலுங்கு வெர்ஷனை ராமஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார். 

Source link