-நமது சிறப்பு நிருபர்-
பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் இரு சபைகளும் சுமுகமாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 13 வரை மூன்று வார காலத்திற்கு இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.முதல் நாள் அன்றே, ‘நீட்’ வினாத்தாள் கசிவு பார்லி.,யில் மிக வலுவாக எதிரொலித்தது. டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, பார்லி.,யை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
இதற்கு அடுத்த நாள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தர்மேந்திர பிரதானை பதவி நீக்க வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் பார்லி.,யின் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டன.
போதாகுறைக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கடந்த 21ம் தேதி காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், மற்றொரு எம்.பி.,யான பிரியங்கா, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட்’ வினாத் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடியும், தேர்வு முறைகேடுகள், வினாத் தாள் கசிவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.எனினும், கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை ஐந்து நாட்களும் பார்லி.,யின் இரு சபைகளையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இருவரும் ‘பார்லி.,யில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். விவாதம் நடத்த விடுங்கள்’ என, பலமுறை வலியுறுத்தினர். ஆனால், தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்த நீக்கும் வரை எந்தவொரு விவாதத்தையும் நடத்தவிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்தன.
இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதிலும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதிலும் சிக்கல் நீடித்தது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டதால், ஏற்பட்ட நிதியிழப்பும், ஜனநாயக பின்னடைவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பார்லி.,யின் இரு சபைகளும் செயல்பட ஒரு நிமிடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் செலவு என, 2012ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால் தெரிவித்தார்.
அதன்பிறகு, இந்த செலவுகள் பற்றி மத்திய அரசோ, அமைச்சர்கள் தரப்பிலோ எந்த விதமான தகவல்களும் இல்லை. எனினும், 14 ஆண்டுகால இடைவெளியில் ஏற்பட்ட எம்.பி.,க்கள், அலுவலர்களின் சம்பளம், இதர படிகள் அதிகரிப்பு, பயணக்கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொகை, இரு மடங்காக அதிகரித்திருக்கும். அந்த வகையில் இரு சபைகளையும் கூட்டுவதற்காக மட்டுமே, தினமும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
கடந்த 2014 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கியதால், வரி செலுத்தும் பொதுமக்களின் பணம், பழைய கணக்கீட்டின்படி 3,300 கோடி ரூபாய் வீணாகியுள்ளது. இப்போதை செலவுகளின்படி கணக்கிட்டால், இன்னும் சில ஆயிரம் கோடி அதிகரித்திருக்கும்.
ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு 120 நாட்கள் வரை பார்லி., இயங்கி வந்த நிலையில், கடந்த 17வது லோக் சபா ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டுமே இயங்கியது. தற்போது 18வது லோக்சபாவும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாதிக்கப்பட்டு வருகிறது. பார்லி.,யின் இரு சபைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்படுவதால், அரசை கேள்வி கேட்கும் மிக முக்கியமான ‘கேள்வி நேரம்’ மற்றும் அவசர பொதுப் பிரச்னைகளை எழுப்பும் ‘பூஜ்ய நேரம்’ ஆகியவை கைவிடப்பட்டு வருகின்றன.
இதனால், தொகுதி பிரச்னைகளையும், நாட்டின் முக்கிய விவகாரங்களையும் எம்.பி.,க்களால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை. மேலும், முறையான விவாதங்கள் இல்லாமல், அவசர, அவசரமாக முக்கிய சட்ட மசோதாக்கள், வரவு – செலவு ஒதுக்கீடுகளை நிறைவேற்றும் தவறான முன்னுதாரணமும் நிகழ்கிறது. இரு சபைகளும் முடங்குவதால் ஒருபுறம் மக்களின் வரிப் பணம் வீணாவதுடன், மறுபுறம் மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழலும் ஏற்படுகிறது.
தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகி இருப்பதால், நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் பார்லி.,யின் இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் சுமுகமாக நடத்த விடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
