திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமி மடத்தின் நிலம் மோசடி வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், அங்கு நிலத்தை ஆக்கிரமித்து கடை நடத்தியவர்களுக்கு எதன் அடிப்படையில் மின், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது என, விசாரணை நடத்தினர்.
பழனி அடிவாரம், பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு, 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனி சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பதிவுத்துறையினர் உட்பட பல்வேறு நபர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தி, ஆவணங்கள், சாட்சியங்களை சேகரித்தனர்.
விசாரணையின் அடுத்த கட்டமாக, 1880 முதல் பழனி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தின் மீது நடந்த வழக்குகள், ஆக்கிரமிப்புகள், அதில் சம்பந்தப்பட்டவர்கள், சாட்சி கையெழுத்திட்டவர்கள், ஆக்கிரமித்து வணிகக்கடை நடத்தியவர்கள், வணிக அனுமதி கொடுத்தவர்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவை எந்த ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசால், எழுத்துப்பூர்வமான ஆவணங்கள், மின்வாரியம் தரப்பில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.மேலும், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றது தொடர்பாகவும், வழக்குகள், ஆவணப்பதிவுகளில் கையெழுத்திட்ட சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
