தொடரை வென்றது இந்தியா: இஷான் கிஷான், திலக் வர்மா அரைசதம்

ஹராரே: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் அசத்திய இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது. 81 ரன் விளாசிய இஷான் கிஷான், ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

வைபவ் ஏமாற்றம்: இந்திய அணி துவக்கத்தில் திணறியது. அபிஷேக் சர்மா (8) விரைவில் வெளியேறினார். ரிச்சர்ட் நகரவா ஓவரில் (3வது) 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 4,6,4,4 என விளாசினார். வைபவ், 20 ரன்னுக்கு (9 பந்து) அவுட்டாக, இந்தியா 3 ஓவரில் 29/2 ரன் எடுத்து தவித்தது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 25 ரன் எடுத்தார்.

இருவர் அரைசதம்: பின் இஷான் கிஷான், திலக் வர்மா மிரட்டினர். 31 பந்தில் இஷான், ‘டி-20’ அரங்கில் 12வது அரைசதம் எட்டினார். முசரபானி ஓவரில் (14வது) திலக் வர்மா ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். சிக்கந்தர் ராசா வீசிய அடுத்த ஓவரில் இஷான் 4,4,6 என, இந்திய ரசிகர்கள் மனம் இனிக்க விளாசினார். திலக் வர்மா, 23 பந்தில் அரைசதம் எட்டினார். இஷான், 81 ரன்னுக்கு (44 பந்து, 9×4, 2×6) நியூமேன் நியாமுரி பந்தில் அவுட்டானார். ரிங்கு சிங், 12 ரன் எடுத்தார். கடைசி 5 ஓவரில் 61 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 20 ஓவரில் 219/5 ரன் குவித்தது. திலக் வர்மா (60 ரன், 29 பந்து, 5×4, 3×6), ஷிவம் துபே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிரின்ஸ் காயம்: கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சில் அதிர்ந்தது. யாஷ் தாகூர் பந்தை (1.2வது ஓவர்) பிரையன் பென்னட் அடித்தார். பந்து நேராக திலக் வர்மாவின் விலா எலும்பு பகுதியில் தாக்க, ‘கேட்ச்’ நழுவியது. வலியால் துடித்த திலக், விரைவில் மீண்டார். தனது அடுத்த ஓவரில் பென்னட்டை (32) அவுட்டாக்கிய தாகூர், சர்வதேச அரங்கில் தனது முதல் விக்கெட்டை பெற்றார். பென் கர்ரான் (1), டியான் மையர்ஸ் (12) நிலைக்கவில்லை. பிரின்ஸ் யாதவ் பந்தில் (6.2), கேப்டன் சிக்கந்தர் ராசா (0) நடையை கட்டினார்.

இதற்கு பின் இடது தொடை பகுதி பிடிப்பால் அவதிப்பட்ட பிரின்ஸ், வெளியேறினார். ஓவரின் எஞ்சிய பந்துகளை ஷிவம் துபே வீசினார். வெஸ்லி மாதவரே (2) ‘பெவிலியன்’ திரும்ப, ஜிம்பாப்வே 9 ஓவரில் 67/5 ரன் எடுத்து தத்தளித்தது. மருமானி, 24 ரன் எடுத்தார். ‘டெயிலெண்டர்கள்’ அபிஷேக் சர்மா ‘சுழலில்’ சிக்கினர். ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 129 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

1,500 ரன்

அரைசதம் கடந்த இஷான் கிஷான், சர்வதேச ‘டி-20’ அரங்கில் 1,500 ரன் எட்டிய 11வது இந்திய வீரரானார். முதல் இடத்தில் ரோகித் சர்மா (4,231 ரன், 159 போட்டி) உள்ளார். இஷான், 54 போட்டிகளில் 12 அரைசதம், 1 சதம் உட்பட மொத்தம் 1,579 ரன் (சராசரி 29.79, ஸ்டிரைக் ரேட் 147.15) எடுத்துள்ளார்.

இரங்கல்

ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு துணை தலைவர் சில்வஸ்டர் மத்ஷாகா, 76, மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா, ஜிம்பாப்வே வீரர்கள் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

யாஷ் தாகூர் அறிமுகம்

இந்திய அணியில் அசோக் சர்மாவுக்கு பதிலாக ‘வேகப்புயல்’ யாஷ் தாகூர், 27, அறிமுகமானார். சர்வதேச ‘டி-20’ல் இந்தியா சார்பில் அறிமுகமாகும் 124வது வீரர். கோல்கட்டாவில் பிறந்த இவர், உள்ளூர் போட்டிகளில் விதர்பா, பிரிமியர் லீக் தொடரில் லக்னோ, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். நேற்று பந்துவீச்சில் முத்திரை பதித்தார்.

முதல் அனுபவம்

இந்திய கேப்டனாக முதல் ‘டி-20’ தொடரை வென்றார் ஷ்ரேயஸ் ஐயர். தொடர்ந்து 8 ‘டி-20’ போட்டிகளில் ‘டாஸ்’ வென்ற இவர், நேற்று முதல் முறையாக ‘டாசில்’ ஏமாற்றம் அடைந்தார்.

200 ரன் சகஜம்

இந்தியா 219/5 ரன் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச ‘டி-20’ அரங்கில் ஒரு ‘காலண்டர்’ ஆண்டில் (2026) அதிக முறை (9) 200+ ரன் எடுத்து, தனது சாதனையை இந்தியா சமன் செய்தது. முன்னதாக 2024ல் 9 முறை 200+ ரன் எடுத்திருந்தது.

* சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியா, 52வது முறையாக 200+ ரன் எடுத்து, முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா (29 முறை) உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 3வது முறையாக 200+ ஸ்கோர் எடுத்தது.

* சர்வதேச ‘டி-20’ அரங்கில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி 3வது முறையாக 200+ ரன் குவித்தது. இதற்கு முன் 256/4 (சென்னை, 2026), 234/2 (ஹராரே, 2024) ரன் எடுத்திருந்தது.

Source link