“எங்களுடைய முக்கிய கோரிக்கைகளில் ஒன்று நிறைவேறியுள்ளது”

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் எதிரொலியாக இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். இந்த தொடர்  போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து, மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதனையடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை நேற்று (25.07.2026) ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கரப்பான் ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் செய்தியாளர்களுக்குத் தமிழில் பேட்டியளித்துள்ளார். அதில், “நாட்டின் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுடைய முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, இழப்பீடு தொடர்பான எங்களுடைய கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்கப்படும். மூன்றாவது கோரிக்கையாக, டெல்லியிலோ வேறு எந்த மாநிலத்திலோ மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எஃப்.ஐ.ஆர். வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். 

மேலும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டோம். இந்தக் கோரிக்கையையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேபோல், எங்களுடைய கொள்கைச் சீர்திருத்தச் சாசனத்தை  பாயிண்ட்-பாயிண்டாக ஆய்வு செய்வதாகவும், அதன் பின்னர் எங்களுடைய பிரதிநிதிகள் குழுவைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

குறிப்பு : சௌரவதாஸ் பேசும் போது பல்வேறு இடங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினார். அதனைத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

Source link