தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (APAAR) ஐடி உருவாக்கத்திற்காக, தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க அல்லது இந்தத் திட்டத்திலிருந்து விலக (Opt-out) பெற்றோருக்கு விருப்பம் வழங்கும் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, நாடு முழுவதும் அமல்படுத்துமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜெய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும், சட்டத்திற்கு உட்பட்டதைத் தவிர வேறு எந்தவொரு தனியார் நிறுவனத்துடனோ அல்லது மூன்றாம் தரப்பினருடனோ பகிரப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சனிக்கிழமை வெளியான இந்த ஜூலை 20 தேதியிட்ட உத்தரவில், “சூழல்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் பரிசீலித்த பிறகு, ஒடிசா உயர் நீதிமன்றம் ‘ரோஹித் ஆனந்த் தாஸ் எதிர் ஒடிசா அரசு’ வழக்கில் எடுத்த அணுகுமுறையை நாங்களும் ஏற்றுக்கொள்ள முனைகிறோம். அந்த வழக்கில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் ஒப்புதலை மறுக்க அல்லது நிறுத்தி வைக்க ஏதுவாக, தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி ஒப்புதல் படிவத்தில் தகுந்த திருத்தங்களைச் செய்ய மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
தொடர்ந்து அந்த அமர்வு, “ஒப்புதல் என்பது அர்த்தமுள்ளதாகவும், தகவலறிந்த முடிவாகவும் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய பாதுகாப்பு அம்சம் மிகவும் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். அதன்படி, மேற்கூறிய தீர்ப்பின் பத்தி 19-ல் உள்ள வழிகாட்டுதல்கள், தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தைச் செயல்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம்” என்று குறிப்பிட்டது.
டிசம்பர் 12, 2025 அன்று ஒடிசா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பத்தி 19, “மாதிரி ஒப்புதல் படிவத்தில் ‘விலகும்/ஒப்புதலை மறுக்கும்’ விருப்பத்தைச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்வதை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது. தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து சில பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோதே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
மனுதாரர்கள் தங்களது வாதத்தில், “இந்தத் திட்டம் குழந்தைகளின் கல்விப் பயணத்தை நீண்டகாலமாகக் கண்காணித்தல், சுயவிவரப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கல்வித் துறைக்குள் அரசு நடத்தும் ஒரு கண்காணிப்பு அமைப்பாகச் செயல்படுகிறது. இத்தகைய விரிவான தகவல்களைச் சேகரிப்பதும் சேமித்து வைப்பதும், அதை கல்வித் துறையைத் தாண்டி பிற தேவைகளுக்கும் பயன்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. இது தகவல் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான கடுமையான கவலைகளை எழுப்புகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதேவேளையில், தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தின் கீழ் தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து சேரும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளை நீதிமன்றம் “தவறான புரிதல்” என்று கூறியுள்ளது. “தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது ஒரு சட்டப்பூர்வ கட்டாயத்தின் கீழ் இல்லாமல், ஒரு நிர்வாகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பதற்காக மட்டுமே, தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பான தங்களின் பொறுப்புகளிலிருந்து அதிகாரிகள் விலகிவிட முடியாது” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், “தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு திட்டத்தின் கீழ் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், செயலாக்குதல், சேமித்தல், வைத்திருத்தல், பகிர்தல் அல்லது பயன்படுத்துதல் ஆகிய அனைத்தும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP Act)-ன் விதிகளுக்கு உட்பட்டே கண்டிப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், தரவுப் பொறுப்பாளர்கள் (Data Fiduciaries) சட்டப்பூர்வமான, பாதுகாப்பான மற்றும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தரவைச் செயலாக்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
