தமிழகம் – கர்நாடகம் இடையே பேருந்துகள் ரத்து!

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகத் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில், வாட்டல் நாகராஜ் தலைமையிலான கன்னட ஒக்கூடா கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு கன்னட ஆதரவு அமைப்புகள் இன்று (26.07.2026) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

அதாவது கர்நாடகாவில் நிலவும் போதிய மழையின்மை காரணமாக அணை நிலவரங்களைக் சுட்டிக்காட்டி, தமிழகத்திற்குத் தற்போதைக்குக் கூடுதல் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்றும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் மேகதாது அணைத் திட்டத்தை அம்மாநில அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். மேலும், மேகதாது அணை கட்டுமானத்திற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். 

இந்தத் திடீர் போராட்ட அறிவிப்பால் எல்லையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையிலேயே  நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டிய சோதனைச் சாவடிகளில் இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், காவிரி விவகாரம் குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Source link