ஈரோடு: தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:
த.வெ.க.,வில், செங்கோட்டையன் தலைமையில், ‘அ.தி.மு.க., அகதிகள்’ அணி உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். யார் அகதிகளாக போகின்றனர் என்று, அவருக்கு காலம் பதில் சொல்லும்.
நீட்’ விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத த.வெ.க., அரசு, ஜனநாயகன் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
கடந்த ஆட்சியில், கடலில், 84 கோடி ரூபாய்க்கு பேனா வைப்பதாக சொன்னாங்க. பேனா வைக்க வேண்டும் என்று யார் கேட்டனர்? இதுபோல எதை எதையோ கேட்பதற்கெல்லாம் பதில் சொன்னால் மனசு சங்கடம் ஏற்படும்.
நாங்கள் மூத்த அரசியல்வாதிகள் என்பதால், இதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன் வந்திருந்தால், 234 தொகுதியிலும் த.வெ.க., வெற்றி பெற்றிருக்கும்.
முதல்வர் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை, 2,500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு, ”தமிழகம், 13 லட்சம் கோடியே 32 லட்சம் ரூபாய் கடனில் உள்ளது. இவற்றை சரிசெய்ய வேண்டும். தி.மு.க., 1,000 ஆயிரம் ரூபாயை எப்போது கொடுத்தனர்; எங்களை மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள்,” என்றார்.
