சென்னை – ஹாங்காங் விமான சேவை புயலால் ரத்து; சர்வதேச பயணியர் அவதி

சென்னை: ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள ‘தைபூண் நவுல்’ புயல் காரணமாக, சென்னை – ஹாங்காங் இரு மார்க்கத்திலும் இயக்க வேண்டிய ‘கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ்’ விமான சேவை, இன்று ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச பயணியர் அவதியடைந்தனர்.

சீனாவின் தெற்கு கடற்கரை பகுதியை ஒட்டி ஹாங்காங்கில் 217 பயணியருடன் புறப்பட்ட ‘கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ்’ விமானம், நேற்று இரவு 11:50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம், நள்ளிரவு 12:50 மணிக்கு, 220 பயணியருடன், மீண்டும் ஹாங்காங் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹாங்காங்கில் ‘தைபூண் நவுல்’ என்ற புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக, அங்குள்ள வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பாதுகாப்பு கருதி, அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து ஹாங்காங் செல்ல திட்டமிட்டிருந்த பயணியர், கடும் அவதியடைந்தனர்.

அதேபோல், ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு இன்று வர இருந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானமும், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் இந்த விமானம் வாயிலாக, லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், சீயோல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு செல்ல இருந்த பயணியர், விமான சேவை ரத்தால் அவதியடைந்தனர்.

விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஹாங்காங்கில் புயல் தாக்கம் குறைந்ததும், நாளை அதிகாலை அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் புறப்பட்டு செல்லும்’ என்றனர்.

Source link