உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்; பிச்சாவரத்தில் அலையாத்தி செடிகள் நடவு!

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் வனச் சரகத்தின் சார்பில் உலக சதுப்புநிலக் காடுகள் தினம் பிச்சாவரம் படகு இல்ல வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், பிச்சாவரம் வனச் சரக அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், அவற்றின் பாதுகாப்பு அவசியம் மற்றும் சதுப்புநிலக் காடுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிச்சாவரம் பகுதியில் அலையாத்தி செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பிச்சாவரம் வனவர் ராஜேஷ்குமார், வனக்காப்பாளர்கள் ஞானசேகர், விக்னேஷ் பிரபு, சரளா, தணிகாசலம், முத்துக்குமரன், வன காவலர் தசரதராமன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் படகு ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக  கடந்த ஜூலை 23-ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் உயிரியல் ஆய்வு மையம், பிச்சாவரம் வனச் சரகத்துடன் இணைந்து உலக சதுப்புநிலக் காடுகள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிதம்பரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலையாத்தி செடிகளை நட்டு, சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

Source link