ஐதராபாத்: முழுமையற்ற கொள்கை அடிப்படையில், மேற்கத்திய நாடுகளில் தவறான விஷயங்கள் நடக்கின்றன. அவற்றை நாம் உணர்ந்து நடக்க வேண்டும் என மோகன் பாகவத் பேசினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
பழங்காலத்தை சேர்ந்தவை அனைத்தும் மதிப்பற்றவை என ஆங்கிலேயர் ஆட்சி நம்மை நம்ப வைத்தது. நமது அமைப்பை நாம் மறந்துவிட்டோம். முழுமையற்ற கொள்கை அடிப்படையில், மேற்கத்திய நாடுகளில் தவறான விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், அவற்றுக்கு அந்நாடுகளிடம் தீர்வு இல்லை. இதனால், அங்கு பல பிரச்னைகள் எழுந்துள்ளன. நாம் அவற்றின் பாதிப்புகளை உணர்ந்து நடக்க பழகிக் கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் இல்லாத பல விஷயங்கள் அங்கு உள்ளன. யார் உயர்ந்தவர் என்ற விவாதம் அங்கு உள்ளது. ஆண் உயர்ந்தவரா அல்லது பெண் உயர்ந்தவரா என விவாதம் உள்ளது. இயற்கையாக, ஆண்களுக்கு ஆதரவானவர்கள், ஆண்களே உயர்வானவர்கள் என்பார்கள். பெண்களுக்கு ஆதரவானவர்கள், பெண்களே உயர்ந்தவர்கள் என்பார்கள். தற்போது யார் உயர்ந்தவர் ? யார் தாழ்ந்தவர் என்ற விவாதம் வருகிறது.
பெண்கள் உயர்ந்தவர் என்றால், அவர்கள் ஏன் குடும்பத்தில் அடிமைகளாக உள்ளனர் என்ற கேள்வி எழும். உங்களை அடிமைகளாக சிக்க வைக்கும் திருமணத்தை ஏன் ஏற்க வேண்டும்.ஒரு பெண் அனைத்தையும் செய்ய முடியும் என்பது மாயை. ஒரு ஆண் அனைத்தையும் செய்ய முடியும் என்பதும் மாயை. ஏதாவது செய்ய வேண்டும் என்றால், ஆணும், பெண்ணும் இணைந்து செய்ய வேண்டும்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் அது சார்ந்த அனைத்து சமூகங்களும் உள்ளன. இத்தகைய போக்குகள் சமூகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் சில இயல்பாகவே அமைந்தவை. இயற்கையால் தீர்மானிக்கப்படுபவை. இதில் நாமோ அல்லது அவர்களோ எதையும் மா்ற முடியாது. அவர்கள் அப்படித்தான் பிறந்து இருக்கிறார்கள். அதே நேரத்தில்சில போக்குகள், மனநிலை மாற்றங்கள் அல்லது உடல் ரீதியான ஈர்ப்பு பிற்காலத்தில் உருவாகின்றன.
உலகம் முழுவதும் இத்தகைய நிலை காணப்படுவதால், நம்மிடம் மட்டும் இது இல்லை என்று கூற முடியாது. நாமும் மனிதர்களே. நம்மிடையேயும் இத்தகையவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளை நாம் அமைதியான முறையில் செய்திருக்கிறோம்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
