புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அத்துறையின் கூடுதல் பொறுப்பை நேற்று முறைப்படி ஏற்றார்.
நீட் எனப்படும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது, கடந்த 20ல் வன்முறையாக மாறியது.
இந்த பிரச்னை பூதாகரமானதை அடுத்து, கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், டில்லி கர்த்தவ்ய பவனில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்தில், நேற்று அவர் முறைப்படி பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, கல்வித் துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தேர்வு முறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
சதி முறியடிப்பு! மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமாவால், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் நடந்தது போல், வன்முறையை துாண்டி இந்தியாவை வலுவற்றதாக்க வெளிநாட்டு சக்திகள் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இதை முறியடித்த தர்மேந்திர பிரதானுக்கு பாராட்டுகள். கைலாஷ் விஜய்வர்க்கியா மத்திய பிரதேச அமைச்சர், பா.ஜ.,
மாணவர் நலனே முக்கியம்! பா.ஜ.,வை பொறுத்தவரை பதவியை விட நாடு, இளைஞர்கள் , மாணவர்களின் நலனே முக்கியம். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேவையான சீர்திருத்தங்களை மேற் கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது . தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதிலும், கல்வித் துறையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்ததிலும் சிறப்பாக செயல்பட்டவர். அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
