சென்னை: முதல்வர் அலுவலகம் அமைப்பதற்கு, ஆறு மாதம் அவகாசம் கேட்ட, பொதுப்பணி துறையினரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பல முதல்வர்கள் இந்த அறையை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாரம்பரிய கட்டடத்தில், ஜன்னல்கள் எங்கும் இருக்காது. வெளிக்காற்று உட்புகும் அளவிற்கு, காற்றோட்டமான சூழல் இங்கில்லை. குளிர்சாதன இயந்திரம் உதவியுடன், அறைகள் குளிர்விக்கப்படுகின்றன.
தற்போதைய முதல்வர் விஜய், காற்றோட்டமான அறையை விரும்புகிறார். கார்ப்பரேட் அலுவலகம் போல, இயற்கை சூழலை ரசிக்கும்படி, தனது அறை கண்ணாடி மாளிகை போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும், தற்போதுள்ள அறையின் வாஸ்து, முதல்வருக்கு சாதகமாக இல்லை. இதனால், கோட்டை பாரம்பரிய கட்டடத்தில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள, 10வது மாடிக்கு, முதல்வர் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இந்த மாடியில் இருந்து பார்த்தால், சென்னை துறைமுகம் மற்றும் கடற்கரை அழகை ரசிக்க முடியும்.
உச்சத்தில் முதல்வர் அலுவலகம் இருந்தால், அவர் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என, ஆஸ்தான ஜோதிடர் வாயிலாக கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, முதல்வர் அலுவலகத்தை, ‘புல்லட் புரூப்’ கண்ணாடி உள்ளிட்ட உயரிய அம்சங்களுடன் மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
இப்பணியை முடிக்க, பொதுப்பணி துறை வாயிலாக, ஆறு மாதங்கள் வரை அவகாசம் கேட்கப்பட்டது. அந்த கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. பணியை மூன்று மாதங்களுக்குள் முடிக்க, பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தனியார் கட்டட வடிவமைப்பாளர்கள், ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்கள், பாதுகாப்பு தொடர்பான வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் வாயிலாக, மூன்று மாதங்களுக்குள் பணியை முடித்து, முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 10வது தளம் மட்டுமின்றி, ஒன்பதாவது தளத்தையும், முதல்வர் அலுவலகத்திற்கு பயன்படுத்த, தற்போது திட்ட மிடப்பட்டுள்ளது.
