விளையாட்டு வினையானது : கடலில் இரு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள், வார விடுமுறையை முன்னிட்டு நேற்று (26.07.2026) மதியம் பொழுதுபோக்கிற்காக பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். அதன்படி கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் சென்ற அவர்கள், படகை நிறுத்திவிட்டு கடலில் குதித்துக் குளித்தனர். ஏழு பேரில் மூன்று பேர் படகிலேயே இருந்த நிலையில், நான்கு பேர் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் படகின் என்ஜின் செயலிழந்ததால், காற்றின் திசையில் படகு வேகமாகத் தூரம் நகர்ந்துள்ளது.

இதனால் கடலில் நீந்திக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் படகை நோக்கி நீந்திச் செல்ல முயன்றனர். ஆனால் படகை அடைய முடியாததால், கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். இதற்கிடையில், படகில் இருந்த மூன்று சிறுவர்களுக்கும் என்ஜினை மீண்டும் இயக்கத் தெரியாததால், செல்போன் மூலம் தங்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், ஒரு சிறுவனின் தந்தை மீன்பிடி படகுடன் விரைந்து சென்று, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை மீட்டுள்ளார். 

மேலும், என்ஜின் பழுதால் சிக்கியிருந்த மூன்று சிறுவர்களையும் படகுடன் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்தார். அதே சமயம்  ஏழு பேரில் ஐந்து பேர் கரை திரும்பிய நிலையில், மனோஜ்குமார் மற்றும் ஜோசுவா என்ற இரண்டு சிறுவர்கள் மாயமாகினர். இதனையடுத்து அவர்களைத் தேடும் பணியில் நேற்று மாலை முதல் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள், எட்டு நாட்டுப்படகுகளுடன் ஈடுபட்டனர். இருப்பினும், இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று (27.07.2026) அதிகாலை முதல் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 

அப்போது, தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சுமார் ஒன்றே முக்கால் மைல் தொலைவில் இரு சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு தருவைக்குளம் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த சம்பவம் குறித்து மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் படகின் என்ஜின் பழுதால் ஏற்பட்ட அச்சத்தில் நீந்திய இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Source link