அரசும் ஆன்மீக அமைப்புகளும் கைகோர்த்தால் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும்: காரைக்காலில் துணைநிலை ஆளுநர் பேச்சு

:”சமுதாய வளர்ச்சியில் அரசோடு, காரைக்கால் தருமபுரம் ஆதீனம் போன்ற அமைப்புகள் கைகோர்த்து செயல்படும் போது, அரசின் நலத்திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் மக்களிடம் நம்பகத் தன்மையோடு சென்று சேரும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்காலில் தருமபுர ஆதீனம் சார்பில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதாரப் பூங்காவிற்கு (Traditional Health Park) அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் பேசியதாவது:

“நம்முடைய முன்னோர்களின் அறிவியலும், பாரம்பரியமும், ஆன்மீகமும் ஒன்றாகச் சேர்ந்து வருங்கால தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் பாரம்பரிய சுகாதாரப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஆன்மீகப் பணியைத் தாண்டி ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற ரீதியில் செயல்படும் தருமபுர ஆதீனத்திற்குப் புதுச்சேரி அரசு மற்றும் காரைக்கால் மக்கள் சார்பில் என் மனமார்ந்த பாராட்டுகள்.

கோயில் சார்ந்த நம் பண்பாட்டில், ஆன்மீக மையங்கள் சமூகத்தின் பொருளாதாரக் களஞ்சியமாகவும் அன்ன சத்திரங்களாகவும் திகழ்ந்தன. கொரோனா பேரிடர் காலத்தில் தருமபுர ஆதீனம் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ வளாகம், கபசுர குடிநீர் விநியோகம், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கி ஆற்றிய சேவை போற்றத்தக்கது.

தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு, மலிவு விலை உணவகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் எனப் பல்வேறு நற்பணிகளை ஆதீனம் முன்னெடுத்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க, தருமபுர ஆதீனம் தனது 4 இடங்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒதுக்கித் தந்துள்ளது. இது ஆயிரம் அன்னதானங்களுக்குச் சமமானது.

இன்றைய அவசர உலகில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். இதற்கு ஆயுஷ் முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றின் மகத்துவத்தை உணர்வது அவசியம்.

இங்கு அமையவுள்ள பாரம்பரிய சுகாதாரப் பூங்கா வெறும் செடிகள் வளர்க்கும் தோட்டமாக இல்லாமல், எதிர்கால தலைமுறைக்கு மூலிகை மருத்துவம் கற்றுத் தரும் ‘திறந்தவெளி பல்கலைக்கழகமாக’ (Open University) செயல்படும். யோகா, தியான மையங்கள், இயற்கை நடைபாதை என பல்நோக்கு அம்சங்களுடன் உலகத் தரத்திலான மருத்துவ சுற்றுலாவுக்கு இது வழிவகுக்கும்.

காரைக்காலின் வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ள தருமபுர ஆதீனத்தின் சமுதாயத் தொண்டு இந்தச் சுகாதாரப் பூங்காவோடு நின்றுவிடக் கூடாது. கல்வி, மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் ஆதீனம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இதுபோன்ற அறப்பணிகளுக்குப் புதுச்சேரி அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.”

— இவ்வாறு துணைநிலை ஆளுநர் பேசினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.



Source link