சட்டவிரோதமாக ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

முதல்வர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 23ஆம் தேதி வெளியானது. கேவிஎன் நிறுவனத்தின் முதல் தமிழ் படமான இப்படத்தை வினோத் இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். 

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதில் 10 பேரை கைது செய்துள்ளது. மேலும் மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதனிடையே இணையத்தில் கசிந்த படத்தைப் பார்த்ததாகக் கூறி சேலத்தை சேர்ந்த பிரதீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி பிரதீப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செயதார். அதில் தன்னை முதலில் சாட்சியாக சேர்த்துவிட்டு பின்னர் தன்மீதே வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், பிரதீப் மீது வேறு எந்த கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்று கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரு நபர் உத்தரவாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் 15 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு சைபர் கிரைம் போலீசார் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். 

Source link