“மீண்டும் போரா*ட்டம் நடத்தப்படும்” – மத்திய அரசுக்கு சி.ஜே.பி. எச்சரிக்கை!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் எதிரொலியாக இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். இந்த தொடர்  போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து, மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. 

இதனையடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் (25.07.2026) ராஜினாமா செய்தார். இந்நிலையில் பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா, 2026-ஐ நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கும் மத்தியில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று (27.07.2026) அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து மசோதா அறிமுகத்திற்கு மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் ஜனதா கட்சி  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதாவது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ததற்கு சி.ஜே.பி. கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், மீண்டும் மாநிலம் தழுவிய மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link