தமிழகத்தின் முக்கியத் தொழில் மற்றும் கல்வி மையமாகத் திகழும் கோவையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி வழங்க மறுத்திருப்பது கொங்கு மண்டல மக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் இன்று தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோவை பந்தயசாலை (Race Course) பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு திடீரெனத் திரண்டனர்.
அவர்கள் கைகளில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு:
“கோவைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கு!”
“தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதே!” எனத் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
முழக்கங்களை எழுப்பியவாறே, போராட்டக்காரர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தடுப்புகளை ஏற்படுத்திப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஈஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரைக் காவல்துறையினர் பலவந்தமாகக் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இந்தத் திடீர் முற்றுகைப் போராட்டம் காரணமாகப் பந்தயசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், வருமான வரித்துறை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/27/whatsapp-image-2026-2026-07-27-15-00-26.jpeg)
கைது செய்யப்படுவதற்கு முன்பாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“கோவை நகரம் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரம். இங்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியத் தேவை. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் திட்டத்தை நிராகரித்திருப்பது தமிழகத்தின் மீது காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தக் கூடாது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
