சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தனக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், சமூக வலைத்தள பக்கங்களில் தன்னைப்பற்றி அவதூறான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாக மேயர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் . மேலும், மர்ம நபர்கள் சிலர் சமூக ஊடகங்கள் வழியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேயர் பிரியாவின் இந்த அதிரடி புகாரைத் தொடர்ந்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர். போலியான கணக்குகள் மூலம் இந்த மிரட்டல்களும், அவதூறுகளும் பரப்பப்படுகிறதா என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கணக்குகளைக் கண்டறியும் பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
