நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வினாத்தாள் கசிவைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், இந்த நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இளைஞர்களின் இந்த போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அதன்படி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே போல, உயிர் இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், மனம் உடைந்து போன ரித்திக் (21) என்ற உத்திரபிரதேச மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், மாணவர் ரித்திக்கின் தந்தை அனுப் மிஸ்ரா கூறுகையில், ”மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய ரித்திக், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கடந்த மே 14-ம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் முன்னதாகவே ராஜினாமா செய்திருக்க வேண்டும். இது மாணவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த தாமதமான முடிவு. டெல்லியில் அமைதியாகப் போராடிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் நெஞ்சைப் பதறவைத்தது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ரூ.1 கோடி இழப்பீடு குறித்துப் பேசிய அவர், “அரசு வழங்கும் எந்தவொரு இழப்பீடும் எனது மகனின் உயிரைத் திரும்பத் தராது” என்று கண்ணீருடன் கூறினார்.
