புதுடில்லி: நான் வீதியில் இறங்கி போராடுபவன். குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு போராடும் சமூக ஆர்வலர் அல்ல என்று பாஜ எம்பி தர்மேந்திர பிரதான் கூறினார்.
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான் இன்று பார்லிமெண்ட் வந்தார். காரில் இருந்து அவர் இறங்கி நடந்து சென்ற போது பார்லி. நுழைவுவாயிலில் திரண்டு காத்திருந்த பாஜ எம்பிக்கள், அவருக்கு கைகுலுக்கி ஆதரவளித்தனர்.
பின்னர், உற்சாகமாக வரவேற்று நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை தெரிவித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் தர்மேந்திர பிரதான் இன்முகத்துடன் எதிர்கொண்டார். ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் பொருட்டு தொப்பி ஒன்றை பாஜ எம்பிக்கள் அவருக்கு அளித்தனர்.
அப்போது அங்கே காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் வந்தார். பிரதானை கண்ட அவர், ராஜினாமா பற்றி குறிப்பிட்டு இது நடப்பது தான் என்று ஆறுதல் தொனிக்கும் விதமாக பேசினார். அதற்கு உடனடியாக பதிலளித்த பிரதான், ஒன்றும் நடக்கவில்லையே என்றார்.
தொடர்ந்து அவரிடம் பேசிய பிரதான், ‘நான் வீதியில் இறங்கி போராடுபவன். குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு போராடும் சமூக ஆர்வலர் அல்ல’ என்று பதிலளித்தார்.
