“பல ஆண்டு கனவு நனவானது…” – கணேஷ் கே பாபு நெகிழ்ச்சி!

‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கராத்தே பாபு’. இப்படத்திற்கு இணை எழுத்தாளராக ரத்ன குமார், பாக்கியம் சங்கர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக தாவூதி ஜிவால் நடித்துள்ளார். இவரை தவிர்த்து சக்தி வாசுதேவன், கே எஸ் ரவிக்குமார், நாசர், டிடிவி கணேஷ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. நாயகன் ரவி மோகன் டப்பிங் பணிகளை தொடங்கினார். தொடர்து கடந்த ஜனவரியில் படத்தின் டீசர் வெளியானது. அரசியல் கதைகளத்தில் பழிவாங்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது போல் டீசர் அமைந்திருந்தது. ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சில கனவுகள் நனவாகப் பல ஆண்டுகள் ஆகலாம். இன்று, அத்தகையதொரு கனவை நான் நனவாக்கிக்கொண்டேன். ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றுவது எனது பல ஆண்டு கனவு. ‘கராத்தே பாபு’ படத்துடனான அவரது பயணம் நிறைவடையும் வேளையில், என் மனதில் நிறைந்திருப்பது ஆழ்ந்த நன்றியுணர்வு மட்டுமே. நான் பெரிதும் மதிக்கும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு வழிகாட்டியாகவும் மூத்த சகோதரராகவும் அவரை நான் கண்டுகொண்டேன். உங்கள் நம்பிக்கைக்கும், தாராள மனப்பான்மைக்கும், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியமைத்ததற்கும் மிக்க நன்றி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link