எகிப்து மன்னர்களின் கல்லறையில் இருந்த லிக்விட் தங்கம்… 3,000 வருஷமா எதும் ஆகலயாம்; இத சாப்பிடுவாங்களா?

1800-களின் பிற்பகுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும் எகிப்தில் உள்ள மன்னர்களின் கல்லறைகளை  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது ஒரு ஆச்சரியமான விஷயம் கிடைத்தது. ‘தீப்ஸ்’ (Thebes) பகுதியில் உள்ள முத்திரையிடப்பட்ட பானைகளில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கண்டெடுக்கப்பட்டது. மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பிறகும் அந்தத் தேன் சிறிதும் கெட்டுப்போகாமல், அப்படியே சாப்பிடும் பக்குவத்திலேயே இருந்தது.

எங்களை ஏமாத்துறாங்க… சீனா தான் எல்லாத்துக்கும் காரணம்; அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான டிரம்ப்

எகிப்து பிரமிடுகளில் தேன் இருந்தது ஏன்?

பண்டைய எகிப்திய அரசர்கள் இறந்த பிறகு, அவர்களின் மறுவாழ்வுக்காக நகைகள், உடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை அவர்களுடன் சேர்த்துப் புதைப்பது வழக்கம். அதில் தேனும் ஒன்று. எகிப்தியர்கள் தான் முதன்முதலில் முறையான தேனீ வளர்ப்பில் ஈடுபட்டனர். அவர்கள் தேனை வெறும் உணவாக மட்டும் பயன்படுத்தாமல், 300-க்கும் மேற்பட்ட மருத்துவப் பயன்பாடுகளுக்கும், கடவுள்களுக்குப் படைக்கும் வழிபாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தினர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேன் கெட்டுப்போகாதது எப்படி?

பெரும்பாலான உணவுப் பொருட்கள் சில நாட்களில் கெட்டுப்போகும் போது, தேன் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தப்பிப்பது எப்படி? அதற்கு அதன் தனித்துவமான வேதியியல் அமைப்பும் தேனீக்களும் தான் காரணம். 
தேனில் மிகக் குறைந்த அளவே நீர்ச்சத்து உள்ளது, ஆனால் சர்க்கரையின் அளவு மிக அதிகம். இந்தச் சூழலில் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளால் உயிர்வாழவே முடியாது. தேன் இயற்கையிலேயே குறைந்த பி.ஹெச் (ph) அளவு கொண்ட அமிலத்தன்மை கொண்டது. இதுவும் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறது.

தேனீக்களின் இறக்கை காற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடும்

தேனீக்கள் தேனைச் சேகரிக்கும் போது, தங்கள் இறக்கைகளை வேகமாக அசைத்து அதில் உள்ள நீர்ச்சத்தை ஆவியாக்குகின்றன. மேலும், தேனீக்களின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட என்சைம் (Enzyme), தேனில் சிறிய அளவில் ‘ஹைட்ரஜன் பெராக்சைடு’ (Hydrogen Peroxide) என்ற இயற்கையான கிருமி நாசினியை உருவாக்குகிறது.

காலப்போக்கில் தேன் இறுகி அதன் வடிவம் மாறலாமே தவிர, நுண்கிருமிகள் உள்ளே நுழைய முடியாத அமைப்பால் அது ஒருபோதும் அழுகிப் போவதில்லை. அதனால் தான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மன்னர்களுக்கு வைக்கப்பட்ட தேன், இன்று வரை உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Source link