பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்கள் தற்காலிக தடை; தமிழக அரசு உத்தரவு

சென்னை: பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தடை உத்தரவை, இயற்கை வளங்கள் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

மாநில எல்லைக்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை முறைப்படுத்தவும், தற்காலிக தடை விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகம் தேவைப்படுகிறது.

அண்டை மாநிலங்களுக்கு கட்டுமான பொருட்களை பெருமளவு கொண்டு செல்வதால் பற்றாக்குறை மற்றும் செயற்கையான விலையேற்றம் உருவாகிறது. இது மாநிலத்தில் உள்ள கட்டுமான திட்டப்பணிகளை பாதிக்கிறது.

எனவே 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம் கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகள் அதிகாரங்களின்படி, மாநிலத்தில் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும், சுற்றுச்சூழல் மற்றும் சட்ட விரோத கனிம போக்குவரத்தை தடுக்கவும் காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.

3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் இந்த தற்காலிக தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அண்டை மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, அனைத்து தரப்பினரும் இதை உடனடியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Source link