சென்னை: ”நாங்கள் கேட்ட விளக்கங்களை, சபாநாயகர் பிரபாகர் தந்த பின், நேரில் ஆஜராவது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்,” என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில், தலைமை செயலகத்தில், சபாநாயகர் பிரபாகரை நேற்று சந்தித்த பின், கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி:
அ.தி.மு.க., சார்பில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளுங்கட்சியான த.வெ.க.,வில் இணைந்து உள்ளனர்.
அவர்கள் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகரிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனுக்கள் அளித்து உள்ளார்.
அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தொடர்ந்து வலியுறுத்தியும், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; நேரில் சந்தித்தும் உரிய விளக்கம் தரவில்லை. கட்சி தாவிய முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அளித்த, விளக்க கடிதங்களின் நகலை வழங்கும்படி கேட்டுள்ளோம்.
அது கிடைத்தால் தான், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தெரிந்து கொண்டு, சபாநாயகரிடம் நாங்கள் பதில் தெரிவிக்க முடியும். கடித நகலை தருவதாக, சபாநாயகர் கூறியுள்ளார்.
வரும் 30ம் தேதி, பழனிசாமியை நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் கூறியுள்ளார். நாங்கள் கேட்ட விளக்கங்கள் கிடைத்த பின், சபாநாயகரை நேரில் சந்திப்பது குறித்து, பழனிசாமி உரிய முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
