கருவின் பாலினத்தை வெளியிட்ட 'யூ டியூபர்' இர்பானுக்கு சிக்கல்

சென்னை: கருவில் இருந்த சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், ‘யூ டியூபர்’ இர்பானிடம், மக்கள் நல்வாழ்வுத் துறை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.

நம் நாட்டில், கருவின் பாலினத்தை அறியவும், அவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தடை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கர்ப்பிணி மனைவியை துபாய்க்கு அழைத்து சென்ற இர்பான், மருத்துவ பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டார்.

அதை, தன், ‘யூ டியூப்’ சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சார்பில், இர்பானிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கடிதம் வழங்கினார். இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளித்தார். அதையேற்று, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இர்பான் மீது நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘இர்பான் மீது என்ன நடவடிக்கையை சுகாதாரத் துறை எடுத்தது’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், எட்டு வாரங்களுக்குள், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டனர்.

அதை ஏற்று, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக அதிகாரிகள், இர்பான், வழக்கறிஞர் ஜெகன்நாத் ஆகியோரிடம், விசாரணை நடத்தினர்.

இது குறித்து, மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில், இர்பானின் விளக்கம் பெறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பரிசோதனை செய்திருந்தாலும், இந்தியாவில் கருவின் பாலினத்தை வெளியிட, தடை சட்டம் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீதான நடவடிக்கை குறித்து, ஆக., 15ம் தேதி, நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link