சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த முன்னணி கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரெனாட்டஸ் குழுமத்தின் ரெனாகான் பிராண்ட், ரூ.350 கோடி முதலீட்டில் ரெனாஃப்ளெக்ஸ்’ ஃபைபர் சிமெண்ட் பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ரெனாட்டஸ் குழுமத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஆர்.பி. செல்வசுந்தரம் கூறுகையில், “ரெனாஃப்ளெக்ஸ் ஃபைபர் சிமெண்ட் பலகைகளின் அறிமுகம், கட்டுமான நடவடிக்கையில் முழுமையான தீர்வுகளை வழங்கும். ரூ.350 கோடி முதலீட்டில் இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘விஷன் 2047’ இலக்குகளுக்கு ஏற்ப, அதிவேகமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான கட்டுமானங்களுக்கு இந்தப் பலகைகள் பெருமளவில் உதவும்” என்றார்.
ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை அமைத்துள்ள இந்நிறுவனம், ஏஏசி பிளாக்குகள், ரேபிட் வால் பேனல்கள் மற்றும் ஃபைபர் சிமெண்ட் பலகைகளை உற்பத்தி செய்யவுள்ளது. ஒரே ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலம், ‘லேமினார் ஃபுளோ’ என்ற அதிநவீன தொழில்நுட்பம் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
