இட நெருக்கடி காரணமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள முதலமைச்சரின் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போது இயங்கி வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலகப் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை கலைவானர் அரங்கிற்கு மாற்றப்படுகின்றன.
அதோடு 10வது தளத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலாத் துறையின் எழுதுபொருட்கள் அறையை, அதே துறையின் பிற பிரிவுகள் அமைந்துள்ள 9வது தளத்திற்கு மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், அனைத்து இடமாற்றங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
