தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயர் கொண்ட பல்கலையிலேயே இப்படியா? தொடரும் சர்ச்சைக்கு நிர்மல் குமார் விளக்கம் – tamilthai vazhthu controversy at university named after its author nirmal kumar explains

சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) வளாகத்தில் அமைந்துள்ள எரிசக்தி ஆய்வகம் மற்றும் மின்சார சேமிப்பு அமைப்புகளை தமிழக எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் ஆய்வு செய்தார். ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வகத்தின் செயல்பாடுகள், பேட்டரி மின்சார சேமிப்பு தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

சோலார் மின்சார சேமிப்புக்கு புதிய திட்டம்

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் சோலார் மின்சார உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைபேட்டரிபேக்கப் அமைப்புகள் மூலம் சேமித்து, தேவையான நேரங்களில் பயன்படுத்தும் திட்டம் குறித்து ஐஐடி வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார்.

மேலும், வீடுகளில் மானிய விலையில் சோலார் பேனல்கள் அமைப்பது முதல், புதிய சோலார் மின் இணைப்பு பெறுவது, மின்சாரம் உற்பத்தி செய்வது, அதனை மின்வாரியத்திற்கு வழங்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே செயலி (ஆப்) மூலம் மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான விரிவான பசுமை எரிசக்தி கொள்கையை அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறினார்.

கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு

பசுமை எரிசக்தித் துறையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல் குமார்குற்றம்சாட்டினார். அவற்றை சீரமைத்து வெளிப்படையான நடைமுறைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சி.எம் விஜய் கொடுத்த புது ஐடியா… உற்சாகத்தில் பெரம்பூர் மக்கள்!

மேகதாது அணை குறித்து விளக்கம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டும் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்தார். மத்திய அரசு கூறி வரும் விளக்கங்கள் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மேகதாது அணை கட்டுமான முயற்சியை சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தடுக்க முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார். கர்நாடக முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை

இன்றைய தினம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றவரின் பெயர்கொண்ட பல்கலை கழகத்திலே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் மக்கள் மாளிகை (லோக் பவன் – கவர்னர் இல்லம்) வழங்கிய வழிகாட்டுதல் தமிழக அரசுக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில்கூட அந்தந்த மாநில மொழிப் பாடல்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டிலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையும் முன்னுரிமையும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று வலியுறுத்தினார். அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த கருத்துகள் மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளன.

Source link