வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் – CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) முக்கிய நிர்வாகிகள் நடனமாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வாங்சுக் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், மாணவர் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது மற்றும் உயிரிழந்த நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

நேற்று மருத்துவமனையில் இருந்து டிசார்ச்ஜ் ஆன வாங்சுக், காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

வாங்சுக் கருத்து

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாங்சுக், “வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

மேலும் தனது ஆதரவாளர்கள் அனைவரும் “கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன்” தங்களின் வெற்றியைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெற்றி பெறுவதைப் போலவே, மரியாதையையும் அடக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

விமர்சனம்

நீட் வினாத்தாள் கசிவால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகமும், பல மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கைது நடவடிக்கைகளைச் சந்தித்து வரும் வேளையில், தலைவர்கள் இவ்வாறு கொண்டாடுவது சரியல்ல என இணையத்தில் விமர்சனம் எழுந்தது.

மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி போன்றோர், போராட்டக் குழுவினர் 5 நட்சத்திர ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டினர்.

சிஜேபி விளக்கம்

விமர்சனங்களுக்குப் பதிலளித்த சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், “நாங்கள் சாலையில் அமர்ந்தும் போராடுவோம்; நடனமாடிக்கொண்டே எதிர்ப்பையும் பதிவு செய்வோம். இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்” என்று தெரிவித்தார்.

மேலும், அது 5 நட்சத்திர ஹோட்டல் அல்ல, சாதாரண 2 அல்லது 3 நட்சத்திர ஹோட்டலின் அடித்தளக்கூடம் மட்டுமே என்றும், நாடு முழுவதும் சென்று போராட்டங்களை நடத்திவிட்டு டெல்லி திரும்பியுள்ள 200-300 தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காகவே அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.

Source link