காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேகதாது அணை
ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து உள்ளது. அதை விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார்.
இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய ஜல்சக்தி துறையின் இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி கூறும்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
அதிகாரம் உள்ளது
அதேபோல் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது என்றார்.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஜல்சக்தி இணை மந்திரி அளித்த பதில் ஏமாற்றம் அளிக்கிறது. கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மத்திய அரசு தலையிட வேண்டும்
கர்நாடகா – ஆந்திரா இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. காவேரி நதி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தென்னிந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாதது.
நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
