நமது டில்லி நிருபர்
”டில்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கைதானவர்களில் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது” என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
டில்லி ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுதும் ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது மிதமிஞ்சிய போலீசார் குவிக்கப்பட்டது, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம் மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது.
* கிரிமினல் குற்ற பின்னணி இல்லாத நபர்கள் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வீடியோ பதிவுகள் என அனைத்தையும் பத்திரமாக வைக்க வேண்டும்.
* போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இளைஞர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். போராட்டங்கள் நடைபெற்ற மஹாராஷ்டிரா, பீஹார், உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
