‘ஜன நாயகன்’ திரைப்படத்தில், ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒரு கற்பனை உள்நாட்டுப் போரில் பாபி தியோல் தனது படையை வழிநடத்தும் ஒரு காட்சி இடம்பெறுகிறது. எரிந்து கொண்டிருக்கும் நகரத்தின் மேல் ட்ரோன்கள் பறக்கின்றன. தூசி படர்ந்த போர்க்களத்தில் ரோபோக்கள் மனித வீரர்களுடன் மோதுகின்றன. சில நொடிகளுக்கு ஒருமுறை வெடிப்புகள் தொடர்பான திரையை நிரப்புகின்றன. ஆனால், இவற்றில் எதுவும் உண்மையாகத் தோன்றவில்லை. இதுவே ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய குறையாக அமைந்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படங்கள், காட்சி விறுவிறுப்புக்காக சில நேரங்களில் நம்பகத்தன்மையை மீறுவது வழக்கமான ஒன்று. ஆனால் ‘ஜன நாயகன்’ அதைவிட வேறுபட்டதாக இருக்கிறது. ஒரு மாணவர் குறும்படத்தில் காணப்படும் தரமற்ற கிராபிக்ஸ் போல, இயக்குநர் நினைத்தது ஒன்றாகவும், திரையில் வெளிப்பட்டது முற்றிலும் வேறாகவும் இருப்பதால், கதையை ரசிப்பதை விட தயாரிப்பில் என்ன தவறு நடந்தது என்பதே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இந்த ஒரு காட்சியே படத்தின் இரண்டாம் பாதி முழுவதற்குமான முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கூட்டக் காட்சிகள், கணினியில் உருவாக்கப்பட்ட பின்னணிகள் மற்றும் கதாநாயகர்களின் ஏஐ மேம்படுத்தப்பட்ட தோற்றங்கள் திரை முழுவதையும் ஆக்கிரமிக்கின்றன. இதுவே திரைப்படம் வெளியாகிய பிறகு அதிகம் பேசப்பட்ட அம்சமாக மாறியுள்ளது.
யாரும் இப்படி ஒரு தோற்றத்தை எதிர்பார்க்கவில்லை
விஜயின் கடைசி படம் இவ்வளவு மலிவான தோற்றத்துடன் இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. தணிக்கை சிக்கல்கள், நீதிமன்ற வழக்கு, கசிந்த காட்சிகள் என போன்ற பிரச்னைகளால் கடந்த ஆறு மாதங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். வர்த்தக வட்டாரங்கள் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என கணித்தன. விமர்சகர்களும் ஜூலை 23 அன்று கதையும் நடிப்பையும் மதிப்பிடத் தயாராகவே திரையரங்குக்குள் சென்றனர்.ஆனால், படம் சற்று ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக இரண்டாம் பாதியில், படம் மிகவும் தரம் குறைந்த காட்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக விமர்சனம் கூறுகிறது.
முதல் பாதி இயல்பாக இருப்பதால் வெற்றி பெறுகிறது
இரண்டாம் பாதி ஏன் தோல்வியடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, முதல் பாதி எவ்வளவு இயல்பாக இருந்தது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். படத்தின் தொடக்கத்தில் விஜய் ஒரு கைதியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். சிறையில் நடைபெறும் சண்டைக் காட்சி மூலம் அவரது உடல் மொழியும் வீரத்தன்மையும் வெளிப்படுத்தப்படுகிறது.
விஜய் நடித்த தளபதி வெற்றிகொண்டன் மற்றும் மமிதா பைஜு நடித்த விஜயலட்சுமி ஆகிய இரு கேரக்டருக்கு இடையிலான தந்தை-மகள் உறவு உண்மையான இடங்கள், இயற்கையான ஒளியமைப்பு மற்றும் நேரடி நடிப்பின் மூலம் நம்பகமாக உருவாக்கப்பட்டுள்ளது. படம் முன்னேறும்போது சில இடங்களில் ஏஐ பயன்படுத்தப்பட்டதற்கான சிறிய அறிகுறிகள் தெரிகின்றன. மிக மென்மையாகத் தோன்றும் பின்னணிகள், இயற்கையற்ற நகரக் காட்சிகள் போன்றவை இருந்தாலும், அவை கதையின் ஓட்டத்தை பாதிக்கவில்லை. அந்த நேரம் வரை பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு நீடிக்கிறது.
இரண்டாம் பாதியும் ‘ஸ்வாஸ்னியா’ பிரச்சினையும்
இரண்டாம் பாதியில் இயக்குநர் எச். வினோத், அசல் தெலுங்குப் படமான ‘பகவந்த் கேசரி’யிலிருந்து பெரிதும் விலகி அவருடைய சொந்தக் கூற்றுப்படி, தெலுங்கு படத்தின் இரண்டாம் பாதியில் சுமார் 20 சதவீதம் மட்டுமே தமிழில் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள பகுதி முழுவதும் அவருடைய புதிய கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது. பாபி தியோல் நடித்த ‘பீனிக்ஸ்’ என்ற வில்லன், பயம், நவீன போர் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களின் மூலம் இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்க முயல்கிறார் என்ற அரசியல் த்ரில்லராக கதை நகர்கிறது.
இந்த லட்சியமான முயற்சி, காட்சியமைப்பில் மிகப்பெரிய தோல்வியாக மாறியுள்ளதாக விமர்சனம் கூறுகிறது. பீனிக்ஸின் பின்னணி முழுவதும் ஏஐ உருவாக்கிய காட்சிகளால் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ளதாகக் கூறப்படும் ‘ஸ்வாஸ்னியா குடியரசு’ என்ற கற்பனை நாட்டில் நடைபெறும் உள்நாட்டுப் போர், ட்ரோன் தாக்குதல்கள், ரோபோ படைகள் உள்ளிட்ட அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாடு உண்மையான இடமாகவும், நம்பகமான கற்பனை உலகமாகவும் கூட தோன்றவில்லை. கட்டிடங்கள் இயற்கையற்ற மென்மையுடன் காணப்படுகின்றன. வானம் ஒவ்வொரு காட்சியிலும் ஓவியம் போலத் தோன்றுகிறது. இதனால் காட்சிகள் உயிரற்றதாக மாறுகின்றன.
போர்க் காட்சிகள் மேலும் ஏமாற்றம்
போர்க் காட்சிகளில் குறைகள் இன்னும் தெளிவாக வெளிப்படுகின்றன. ட்ரோன்கள் இரு பரிமாணப் பின்னணியில் ஒட்டப்பட்ட முப்பரிமாண மாதிரிகளைப் போலத் தெரிகின்றன. வெடிப்புகளின் தீ மற்றும் புகை, சுற்றியுள்ள சூழலுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக நகர்கின்றன. சில வீரர்கள் மற்றவர்களை விட வேறு வேகத்தில் ஓடுவது போலத் தெரிகிறது. இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இயக்கத்தில் காணப்படும் பொதுவான குறையாக விமர்சகர் குறிப்பிடுகிறார்.
பீனிக்ஸ் பயன்படுத்தும் ரோபோக்கள், ஒரு மொபைல் கேமிலிருந்து எடுத்ததுபோல் தோன்றுகின்றன. அவற்றின் மேற்பரப்பு அமைப்பும், ஒளி பிரதிபலிப்பும் மிகவும் செயற்கையாக இருப்பதால், இந்த காட்சிகளுடன் ஒன்றி படத்தை பார்க்க முடியவில்லை.
ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர்
படம் முழுவதும் எம்.ஜி.ஆர் குறித்த பல குறிப்புகள் இடம்பெறுகின்றன. அரசியல் ஆக்ஷன் திரைப்படத்தில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காட்சி தேவையற்ற அளவுக்கு செயற்கையாக மாறியுள்ளதாக விமர்சனம் கூறுகிறது. ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியில், விஜய் பிரகாஷ் ராஜை தண்டிக்க முனையும் தருணத்தில், சுவரில் தொங்கும் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை கேமரா காட்டுகிறது. அப்போது அந்த உருவப்படம் உயிர்ப்பெற்று, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பேசத் தொடங்குகிறார்.
பின்னர் ஒரு சாட்டையை விஜயிடம் கொடுத்து, ஊழலுக்கு எதிராக அதை பயன்படுத்துமாறு சைகை செய்கிறார். இயக்குநரின் நோக்கம் தெளிவாக இருந்தாலும், காட்சியின் இறுதி வடிவம் அரசியல் குறியீட்டை விட திகில் திரைப்படக் காட்சியைப் போல இருப்பதாக விமர்சனம் தெரிவிக்கிறது.
நடிகர்களின் தோற்றத்திலும் ஏ.ஐ தாக்கம்
சில காட்சிகளில் முன்னணி நடிகர்களின் முக அமைப்பே ஏஐ மூலம் மாற்றப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இது திட்டமிட்ட முடிவா அல்லது பிந்தைய தொழில்நுட்பப் பணிகளின் விளைவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு முறை கவனித்துவிட்டால் அதை மறக்க முடியாது என விமர்சகர் குறிப்பிடுகிறார். விஜயின் முகநிறம் சில காட்சிகளில் மாறுபடுகிறது. அவரது முகத்தின் ஒளியமைப்பு பின்னணியுடன் பொருந்தவில்லை. உண்மையான இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகளில் விஜய் இயல்பாகத் தெரிகிறார். ஆனால் ஏஐ உருவாக்கிய பின்னணிகளில் அவர் தனியாக பின்னர் இணைக்கப்பட்டவர் போல தோன்றுகிறார்.
திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கை
இந்திய சினிமாவில் ஏஐ பயன்படுத்தப்பட்ட முதல் படம் ‘ஜன நாயகன்’ அல்ல. பின்னணி விரிவாக்கம் அல்லது கூட்டக் காட்சிகளை உருவாக்க பல திரைப்படங்கள் ஏற்கனவே ஏஐ உதவியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், ஏஐ பயன்பாடே ஒரு திரைப்படத்தின் முக்கியமான விமர்சனமாக மாறிய முதல் பெரிய இந்திய திரைப்படம் ‘ஜன நாயகன்’ என இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. இப்போது இது செலவைக் குறைக்கும் தொழில்நுட்பம் பற்றிய விவாதம் மட்டுமல்ல. மக்கள் இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது முதலில் குறிப்பிடுவது ஏ.ஐ பயன்பாட்டைத்தான்.
தொழில்நுட்பம் எதிரி அல்ல
ஏ.ஐ தொழில்நுட்பமே பிரச்சினை அல்ல என்று விமர்சகர் கூறுகிறார். வரும் ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் மேலும் மேம்படும். ஏஐ உருவாக்கும் காட்சிகள் உண்மையான விஎஃப்எக்ஸுடன் போட்டியிடும் அளவுக்கு வளரக்கூடும். ஆனால் அந்த நிலை இன்னும் வரவில்லை. அந்த அளவுக்கு தயாராக இல்லாத தொழில்நுட்பத்தை மிகப்பெரிய திரைப்படத்தில் பயன்படுத்தியதுதான் ‘ஜன நாயகன்’ செய்த தவறு என விமர்சனம் கூறுகிறது.
வேலைவாய்ப்பு குறித்த கவலையும் எழுகிறது
இந்த விவாதத்தில் மற்றொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. ஏஐ காரணமாக விஎஃப்எக்ஸ் கலைஞர்கள், பின்னணி நடிகர்கள், கூட்டக் காட்சி உருவாக்கும் கலைஞர்கள் மற்றும் செட் வடிவமைப்பாளர்களின் வேலைகள் குறைந்துவிட்டால், அது வெறும் செலவுக் குறைப்பாக மட்டும் இருக்காது.
இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான விஎஃப்எக்ஸ் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் மனித உழைப்பைத் தவிர்த்து ஏஐ மீது அதிகம் நம்பிக்கை வைக்கத் தொடங்கினால், அது எதிர்காலத்தில் தொழில்துறைக்கு பெரிய சவாலாக மாறும் என விமர்சனம் எச்சரிக்கிறது.
விஜயின் கடைசி படத்திற்கு ஏற்ற தோற்றமா?
கடந்த 30 ஆண்டுகளாக விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ‘கில்லி’, ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் வெற்றி, சர்ச்சைகள், அரசியல் மாற்றங்கள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் பயணித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ தான் தனது கடைசி திரைப்படம் என்று அறிவித்தபோது, அது ஒரு நல்ல படமாக மட்டும் அல்லாமல், இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவருக்கு உரிய பிரம்மாண்டமான விடைபெறும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இந்த விமர்சனத்தின்படி, படத்தின் இரண்டாம் பாதி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கதை, நடிப்பு அல்லது அரசியல் கருத்துகளை விட, அந்த தருணத்திற்கு உரிய காட்சித் தரத்தை படம் வழங்கவில்லை என்பதே மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஒரு நட்சத்திரத்தின் விடைபெறும் திரைப்படம், அவரது திரைப்பயணத்தின் சிறந்த வடிவமாக இருக்க வேண்டும். ஆனால் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதி, தற்போதைய ஏஐ தொழில்நுட்பத்தின் பலவீனங்களையே அதிகமாக வெளிப்படுத்துவதாக இந்த விமர்சனம் நிறைவாகக் கூறுகிறது.
