கருங்கல் ஜல்லிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்: பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 9-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன்.

இதன் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்படும் பாறைகள், கருங்கல் ஜல்லி ஆகியவற்றின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான கற்களுக்கான முக்கிய ஆதாரமாக இம்மாவட்டங்கள் நீண்டகாலமாக திகழ்ந்து வருகின்றன.

பெரிய அளவிலான உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான தரமான கற்கள் கேரளாவில் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும். எனவே, தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களில் கணிசமானவை தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின் மீதான கட்டுப்பாடுகள் விநியோகச் சங்கிலியைப் பாதித்து, கட்டுமானப் பணிகளைத் தடை செய்துள்ளதோடு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும், சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கவும், இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய பொருளாதார மையங்களுக்கான அணுகலை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவை விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மற்றும் வல்லார்படம் சர்வதேச கன்டெய்னர் பரிமாற்ற முனையம் ஆகியவற்றுக்குத் தடையற்ற இணைப்பை வழங்குவதன் மூலம், தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.

உங்கள் அரசின் கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை நான் முழுமையாக மதிக்கிறேன். அதேநேரத்தில், தமிழக அரசின் நோக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சமச்சீரான அணுகுமுறையை உருவாக்க முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவைப்படும் கருங்கல் ஜல்லி தடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் வகையில், தகுந்த தளர்வுகளை அளிப்பது அல்லது பொருத்தமான நடைமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Source link