மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக உள்ள பகீரத் சவுத்ரி, தனது சொந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டத்தின் மூலம் தனது வெள்ளரிப் பண்ணைக்காகப் பெற்ற ரூ.99 லட்சம் மானியத் தொகையைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. பகீரத் சவுத்ரி தனது அமைச்சகத்தின் தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மானியம் பெற்ற விவகாரம் குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்ட சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு, பகீரத் சவுத்ரியின் சகாவும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சருமான ராம்நாத் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஸ்ரீபகீரத் சவுத்ரி திட்டத்தின் கீழ் தான் பெற்ற மானியத் தொகை சம்பந்தப்பட்ட வங்கியில் திருப்பிச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்த மானியத் தொகையைத் தேசிய தோட்டக்கலை வாரியத்திடம் (NHB) திருப்பி அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை வாரியத் திட்டங்களின் கீழ் பகீரத் சவுத்ரியைத் தவிர, ராஜஸ்தானின் ஜாலோர் தொகுதி பாஜக எம்பியான லும்பாராம் சவுத்ரி நிதியுதவி பெற்றுள்ளதாக அமைச்சர் ராம்நாத் தாகூர் அவைக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மலர்களை அதிக அளவில் லாப நோக்கில் சாகுபடி செய்யும் வர்த்தக ரீதியான விவசாயத்தை (commercial farming) ஊக்குவிக்கும் இத்திட்டம், 2014-15 இல் தொடங்கப்பட்ட ‘தோட்டக்கலை ஒருங்கிணைந்த வளர்ச்சி இயக்கத்தின்’ (MIDH) கீழ் வருகிறது. இத்திட்டம் பகீரத் சவுத்ரியின் அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய தோட்டக்கலை வாரியத்தால் (NHB) நிர்வகிக்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் குடைமிளகாய், வெள்ளரி, தக்காளி மற்றும் ரோஜா, அந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட எட்டு வகையான மலர்கள் சாகுபடி செய்யத் திட்டச் செலவில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை (ஒரு குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வரம்பிற்கு உட்பட்டு) மானியம் வழங்கப்படுகிறது.
பகீரத் சவுத்ரியின் வெள்ளரிச் சாகுபடி திட்டம் 16,592 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மூலம் வர்த்தக ரீதியான தோட்டக்கலை மேம்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ், 2025-ம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 467 திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய விலங்கு பராமரிப்புத்துறை செயலாளரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நரேஷ் பால் கங்வாரின் குடும்ப உறுப்பினர்கள் மூவர், கடந்த 5 ஆண்டுகளில் தோட்டக்கலை மானியமாக ஒட்டு மொத்தமாக ரூ.1.16 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி, கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தேசிய தோட்டக்கலை வாரிய திட்டங்களின் கீழ் மானியம் பெற்றுள்ளனரா, அதன் விவரங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது குடும்பத்தினரின் விண்ணப்பங்களுக்கு ‘நலன்களின் முரண்பாடு’ (Conflict-of-interest) அல்லது விலகிக்கொள்ளும் நடைமுறை (recusal policy) எதுவும் உள்ளதா என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தாகூர், மக்கள் பிரதிநிதிகள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் தொடர்பாக, ‘நலன்களின் முரண்பாடு’ அல்லது விலகிக்கொள்ளுதல் குறித்து தற்போதைய தேசிய தோட்டக்கலை வாரியத் திட்ட வழிகாட்டுதல்களில் சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
