போராட்டத்தில் காவல் வாகனத்தை மறித்த இளம்பெண்; நடவடிக்கை எடுக்கும் காவல்துறை

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கடந்த ஒருமாத காலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டம், கடந்த ஜூலை 20 க்கு பிறகு நாடு முழுவதும் தீவிரமடைந்தது. இந்த போராட்டம், டெல்லியைக் கடந்து தமிழ்நாடு,  கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற இந்த மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் மற்றும் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபட்டனர். 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த போராட்ட சமயத்தில், கடந்த ஜூலை 22 ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது, ஒரு பெண் தனியாக அந்த காவல் வாகனத்தை மறித்து, அவர்களைக் கீழே இறக்கி விட்டால் தான் இந்த வாகனத்திற்கு வழி விடுவேன் இல்லை என்றால் இங்கிருந்து நீங்கள் போக முடியாது என்று ஒற்றைக் கையால் அந்த வாகனத்தை மறித்து துணிச்சலாக நின்றார். 

இதையடுத்து, செய்வதறியாத காவல்துறையினர், இளைஞர்களைக் கீழே இறக்கி விட்டுச் சென்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த பெண்ணின் தைரியத்தைப் பலரும் பாராட்டினர். பின்னாளில், அந்த பெண் மாடல் அழகி ரியா யாதவ் (27)என்பது தெரியவந்தது.  

தற்போது, இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகாரில், நீட் போராட்டத்தைத் தொடர்ந்து தன்னை குறிவைத்து  சில மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களையும் பரப்பி வருவதாகவும், அதே போலத் தேவையற்ற பதிவுகளைப் பதிவிட்டு, தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.  

மேலும், இந்த சம்பவத்தால் எனது பெற்றோர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், இது போன்ற மோசமான செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த சட்ட ரீதியிலான முன்னெடுப்பை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று  ஆன்லைனில் புகார் அளித்த அவர், சம்பந்தப்பட்ட தரவுகளையும் (வீடியோ மற்றும் புகைப்படங்கள்) அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரது குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.  

சமீபத்தில், இந்த நீட் போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர், இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை பாஜக திட்டமிட்டுப் பழிவாங்குவதாகவும், இந்த போக்கு தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு இப்படியாக சமூக ஊடகத்தின் மூலமாக மர்ம நபர்கள் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Source link