மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தை அழிப்பதற்காகச் சதியில் ஈடுபட்டு வருவதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே. சிவக்குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2021-ல் அப்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையைத் தயார் செய்து, பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அப்போது நீர்வள ஆணையத் தலைவர், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக்கூறி, அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த வரைவுத் திட்ட அறிக்கையை விவாதிக்க அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அட்டவணை 18-ன் படி மேகதாட்டில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், கடந்த 2015-ல் இதே கேள்விக்கு அன்றைய ஜல்சக்தித் துறை அமைச்சர் உமாபாரதி, அட்டவணை 13-இல் குறிப்பிட்டபடி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது எனப் பதிலளித்திருந்தார். ராஜ்பூஷன் சவுத்ரியின் இத்தகைய பதிலால் பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் சாடினார்.
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்த சிறிது நேரத்திலேயே, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து மேகதாது குறித்து விவாதித்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தை அழிப்பதற்காக மேகதாட்டு அணை கட்டும் கூட்டுச் சதியில் ஈடுபடுவது வெளிப்பட்டுள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாயிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி, தொடர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். சுமார் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். விவசாயிகளும் தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறக்கூடிய பேராபத்து ஏற்படும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றுபடுத்தி தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது கடலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
