“வாழ்க்கையே ஆன்மீகம் தான்… நான் ஒரு ஆளே கிடையாது”

இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் இளையராஜா கலந்து கொண்டு பேசுகையில், “1980முதல் 2000ம் வரை பவுர்னமி அன்று திருவண்ணாமலையில் மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் மலை சுற்றுவதற்கு பிறகு தான் அங்கே அதிகம் பேர் மலை சுற்றினார்கள். இதை அங்கே இருக்கக்கூடிய அடியார்கள் சொல்வார்கள். 

முதல் முறை குருஜி சுவாமிகள் கிரிவலம் போக அழைத்தார். கிரிவலம் சுற்றி முடித்து வருகிறோம், உடனே மழை பெய்தது. உடனே குருஜி என்னை பார்த்து என்ன நீங்க பெரிய சித்தர் போல என்றார். என்ன சாமி இப்படி சொல்றீங்கன்னு கேட்டபோது ஆமா, நீங்க சுற்றி வந்த உடனே வர்னபகவான் ஆசீர்வாதம் கொடுக்கிறார் என்றார். நான் சித்தரெல்லாம் இல்லை, நான் வந்த நேரத்துக்கு மழை வந்துவிட்டது என்றேன். இதே போல் அடுத்த பவுர்னமிக்கும் போகிறேன், அப்போதும் மழை வந்தது. உடனே குருஜி, பார்த்தீங்களா… நான் சொன்னேன்ல நீங்க சித்தர்தான்னு என்றார். 

திருவண்ணாமலைக்கு நான் வந்துவிட்டால் என் காலணிகளை ரூமிலே விட்டுச்செல்வேன். இரண்டு முறை மட்டும்தான் மலையில் வழக்கமான வழியில் சென்றேன். மீதமுள்ள பல முறை பகவான் செல்லும் காட்டுப்பாதையில் செல்வேன். அந்த காட்டுப்பாதை கரடு முரடாக இருக்கும். அப்படி மலை சுற்றும் போது அடி அண்ணாமலையில் உட்காருவது வழக்கம். நாங்கள் போகும் சமயத்தில் கோயில் திறந்திருக்காது. அப்புறம் குருக்கள் வந்து திறப்பார்கள். பின்பு உள்ளே போய் உட்காருவோம்.

நான் உள்ளே உட்கார்ந்திருக்கும் போது என் கூட வந்தவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள். அப்படி ஒரு நாள் நானும் லிங்கமும் தனியாக இருந்தோம். அப்போது பயங்கர வைப்ரேஷன் இருந்தது. வெளியே வந்த பின்பும் அந்த வைப்ரேஷன் என்னை அமுக்கியது. அதே வைப்ரேஷனோடு வீட்டுக்கு வந்தேன். மூன்று மாதம் கடந்துவிட்டது. அதன் பிறகுதான் இந்தப்பாடலை எழுதினேன். இது இறைவனால் கொடுத்தது. நான் எழுதவில்லை. இசை என்பது தெய்வீக கலை” என்றார். 

அப்போது அவரிடம் உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா, “ஏன் என்னை பொறுத்தவரைக்கும் என்று கேட்குறீர்கள். நான் ஒரு ஆளே கிடையாது. ஆன்மீகம் என்று ஒன்று தனியாக இல்லை. வாழ்க்கையே ஆன்மீகம் தான். நீங்களும் வாழ்வது ஆன்மீகம் தான். அதை தனியாக பிரித்து சொல்லாமல் இருக்கலாம். மற்றபடி ஆன்மீகத்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்” என்றார்.    

Source link