தொடர்ந்து அருகில் இருந்த மணிக்குமாரின் நண்பர்கள் அவரை மீட்ட முயற்சித்த நிலையில், முடியாத காரணத்தால் அலறியதால் அருகில் இருந்த பொதுமக்கள் மணிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பெண் ஒருவர் அதே துவாரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டார். அப்போது வெளியே நின்றிருந்த ஒருவர் அவரது கையைப் பிடித்து பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்டார்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் எச்சரிக்கை தரும் விதமாக அந்த கோயில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இடுக்குபிள்ளையார் திருக்கோயிலின் வாயில் மிகக்குறுகலாக உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்கள் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், மூச்சுத் திணறல் அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் குறுகலான இடங்களில் செல்ல சிரமம் உள்ளவர்கள் துவாரத்தின் வழியாக செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், துவாரத்தின் நுழைவுப் பகுதியில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. அந்த கம்பிகளுக்கு இடையில் எளிதாக செல்லக்கூடிய பக்தர்கள் மட்டுமே துவாரத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
