விஜய்க்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மற்றும் வழக்கு ரத்து மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஜூலை 18-ம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசினார். அப்போது அவர், சட்டமன்றத்தைக் கூட்டினால் முதலமைச்சர் விஜய்யின் எலும்புகள் உடைக்கப்படும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, ஜூலை 20 அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்க்கண்டேயனைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 7 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை வழங்கிடும் பி.என்.எஸ் பிரிவு 35(3)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், கைதுக்கு முன் உரிய நோட்டீஸைக் காவல்துறை வழங்கியிருக்க வேண்டும் என்றும், எந்த நோட்டீஸும் வழங்கப்படாமல் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மாஜிஸ்திரேட்டின் முன்அனுமதி பெறாமல், தொடர் குற்றவாளியைக் கைது செய்வதைப் போல இரவு நேரத்தில் வழக்குப்பதிவு செய்து அதிகாலையில் கைது செய்துள்ளனர். சட்டமன்றத்தை மூடிவிட்டுத் தான் இனி பேச வேண்டும் என முதலமைச்சர் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மார்க்கண்டேயன் பேசினார்; மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசவில்லை என்று மார்க்கண்டேயன் தரப்பில் வாதிடப்பட்டது.

போதுமான காரணங்கள் இருந்தால் மாஜிஸ்திரேட் முன்அனுமதி இன்றி கைது செய்யக் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் கைது செய்யப்பட்டார். சட்டமன்றம் நடைபெறும் போது அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் முதலமைச்சரின் நிலை என்ன ஆவது? கைது செய்யப்பட்ட பின்னரும் இருமுறை உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட்டும் அதை ஏற்றுக்கொண்டதால் இந்த நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை கைது செய்வதற்கு முன் உரிய தகவல் தெரிவிக்கப்படாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Source link