மதுரை: அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க தாக்கலான வழக்கில், இவ்விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை நர்மதா தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு, பொதுத்துறை, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதை மறைத்துக் கொண்டு, சக ஆண் ஊழியர்களுக்கு இணையாக பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் வேலைக்கு வருகின்றனர்.
கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிசாவில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை எதுவும் இல்லை. இது பெண் ஊழியர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது. மாதவிடாய் விடுப்பு என்பது சலுகையோ அல்லது சிறப்புரிமையோ அல்ல. அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது சுகாதார மற்றும் தொழிலாளர் நல நடவடிக்கையாகும். இதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளத் தவறுவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய கடமையை புறக்கணிப்பதாகும்.
மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்ய மாநில அளவில் உயர்நிலைக் குழுவை அமைக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோதர்ஷினி ஆஜரானார். அரசு தரப்பு, ‛இது தொடர்பான விதிகளை உருவாக்க, அதை தொழிலாளர் நீதிமன்ற விதிகளில் சேர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை,’ என தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அரசு அமைத்த குழு உறுப்பினர்களின் விபரங்களை தமிழக அரசு தரப்பில் ஆக.24 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
