தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? புதிய சட்டம் இயற்ற பெ.சண்முகம் வலியுறுத்தல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வதாக பாடப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் முகநூலில் வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாகவே இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதனைச் சட்டப்பூர்வமாக்கும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில், “தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாகவே இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதனைச் சட்டப்பூர்வமாக்கும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் அர்லேகர் அதில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி சம்பந்தமான அறிவிப்பு துணைவேந்தரால் வெளியிடப்பட்ட போது, முதலில் வந்தே மாதரம் பாடல் அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்த போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாங்களும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினோம். ஏனென்றால், ‘நீராரும் கடலுடுத்த’ என்கிற தமிழ் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள்தான். அவருடைய பெயரால் நிறுவப்பட்டு உள்ள பல்கலைக்கழகத்திலேயே இந்தப் பாடல் முதலில் பாடப்படாது என்பது அவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அவமானம். ஆகவே, இதை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கிற நிகழ்ச்சி என்கிற முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அமைப்புகளுடைய கருத்துக்களையோ மதிக்காமல் இன்று மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டிருக்கிறது இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இரண்டாவதாக இந்த நிகழ்ச்சிக்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளின் விளைவாக பல்கலைக்கழகத்தில் நடக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களே வராத வகையில் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டு இன்றைக்கு அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இப்படி நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். 

மூன்றாவதாக தமிழகத்தினுடைய உயர்கல்வி அமைச்சர் இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் என்ற முறையில் எடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாருமே அதில் கலந்துகொள்ளவில்லை என்பதும் நம்முடைய எதிர்ப்பினுடைய அடையாளமாக எடுத்துக்கொள்ளலாம்.

அதனால், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்னையில் அதிகாரப்பூர்வமாக அரசினுடைய நிலை என்ன என்பதை முதலமைச்சரோ அல்லது அரசு சார்பில் செய்திக் குறிப்போ இதுவரை வெளியிடாமல் இருப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. இது போன்ற பிரச்னையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை உடனுக்குடன் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை வற்புறுத்த விரும்புகிறேன். 

ஏனென்றால், ஏற்கெனவே அமைச்சர்கள் அமைச்சரவை பதவியேற்பின்போது, வந்தே மாதரம் முதலிலும் அதற்கடுத்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. 

குறிப்பாக வந்தே மாதரம் பாடல் தேசியப் பாடலா என்பது சம்பந்தமாக விடுதலை பெற்ற காலத்தில் இருந்து பலமுறை அரசியல் சாசன நிர்ணய சபையிலேயும், அதற்கு பிறகு பல்வேறு கட்டங்களிலும் ஒரு விரிவான விவாதம் நடத்தப்பட்டு அது முடிவு பெறாமலே போய்விட்டது. ஏனென்று சொன்னால் அந்த பாட்டில் உள்ள பல பாராக்கள் இந்திய நாட்டினுடைய அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையிலும் இருக்கிற காரணத்தினால் அந்தப் பாடலை பாடக்கூடாது என்பதுதான் பொதுவாக நாடு முழுவதும் இருக்கக்கூடிய மதச்சார்பின்மை மற்றும் தேச ஒற்றுமை போன்றவற்றில் அக்கறை உள்ளவர்களின் கருத்து. 

அதே நேரத்தில், இப்போது வந்திருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசாங்கம் இதை கட்டாயம் தேசியப் பாடலாக வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்கிற முறையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் கட்டாயப்படுத்தக் கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது என்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது. இந்த வந்தே மாதரம் பாடலை; பாட வேண்டுமா. பாட வேண்டாமா என்பதை மாநிலங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் சாசனத்திற்கு விரோதமான ஒரு பாடலை பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதே மாதிரி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏற்கனவே இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியாக இருந்தாலும் இப்போது இருக்கிற ஆளுநர் அர்லேகராக இருந்தாலும் இதுபோன்ற சர்ச்சையை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டில் அரசு சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும், வேறு எந்த அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் வரக்கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 

அதன் மூலமாகத்தான், வரக்கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு முறையும் வாதப் பிரதிவாதம் நடத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக தமிழ்நாடு அரசின் சார்பில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளும், அது கல்வி நிலையங்களாக இருந்தாலும், அரசு அலுவலகங்களாக இருந்தாலும் அல்லது வேறு எந்த அரசு சார்பில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்ற நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.” என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஆளும் த.வெ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.  

எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link