பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.
இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
தேர்தல்
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ இல்லாத வெறிச்சோடிய காட்சிகளே காணப்படுகின்றன.
மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாக்கிஸ்தான் அரசு இதுவரை வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடவில்லை.
முசாபராபாத் பேரணி
இதற்கிடையில், பாக்கிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கும் தேர்தல் நடைமுறைக்கும் எதிராக ஆயிரக்கணக்கான மக்கள், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறை
ராவ்லாகோட் பகுதியில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்களுக்கும் பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர்.
ராவ்லாகோட்டின் ஈத்கா மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னணி
தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் கோரி இந்தப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
அரசு ஜூன் 5 அன்று இந்த அமைப்பிற்கு தடை விதித்ததுடன், அதன் முக்கியத் தலைவர்களையும் கைது செய்தது.
பாதிப்பு
இதுவரை பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பூஞ்ச் பகுதி முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டதால், உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தமுள்ள 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முதலில் ஜூலை 27 அன்று ஒரே கட்டமாக நடக்கவிருந்தது.
ஆனால், நிலவும் பதற்றமான சூழல் காரணமாக 3 கட்டங்களாக மாற்றப்பட்டது. அதன்படி நேற்று (ஜூலை 27) மீர்பூர் பகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது.
ஆகஸ்ட் 2 அன்று இரண்டாம் கட்டமாக முசாபராபாத் பகுதி மற்றும் அகதிகளுக்கான 12 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். கடும் பதற்றம் நிலவும் பூஞ்ச் பகுதியில் கடைசி கட்டமாக ஆகஸ்ட் 10 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
அரசியல் களம்
PoK சட்டசபையில் உள்ள 45 தொகுதிகளில், 12 தொகுதிகள் இந்தியப் நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் தொடர்ந்து அரசியல் சர்ச்சை நீடித்து வருகிறது.
தற்போது போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்சன் கமிட்டி (JAAC)யின் பிரதான கோரிக்கை, இந்த 12 தொகுதிகளில் உள்ள அகதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்பதே. ஆனால் அரசு அதை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
அரசு
2021இல் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி 25 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
ஆனால், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் காரணமாகத் தற்போது PPP கட்சியின் பைசல் மும்தாஜ் ரத்தோர் பிரதமராகப் பொறுப்பில் உள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் PML-N மற்றும் பிலாவல் பூட்டோவின் PPP ஆகிய இரு கட்சிகளும் நடப்பு தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்றைய கலவரத்தின்போது பாகிஸ்தான் PML-N ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்களது தொண்டர் முக்தார் யூனுஸ் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு தொண்டர்கள் காயமடைந்ததாகவும் PPP கூறியுள்ளது.
