தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதிக பணிச்சுமை, மன அழுத்தம் தரக்கூடாது; தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக பணிச்சுமையோ, மன அழுத்தமோ அளிக்க கூடாது’ என டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளி முதல்வர்களுக்கு மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்புவதா? எனவும் தேர்தல் கமிஷனிடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டில்லி அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர்களின் சூழ்நிலையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். தேர்தல் பணியின் முக்கியத்துவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. பள்ளியில் ஏற்கனவே நீண்ட நேரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த சூழலில் தினமும் 11 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என அவர்களை நிர்ப்பந்திப்பது மனிததன்மையற்றது.

ஆசிரியர் பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களுக்கு குழந்தை, குடும்பம் இருக்கிறது. எனவே, ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமை, மன அழுத்தம் தரக் கூடாது. தேசத்தின் கல்வி உரிமை சட்டம் பற்றி தேர்தல் கமிஷன் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தேர்தல் பணிக்கு தடையாக இருக்க கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியிருந்த கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி, மிரட்டும் தொனியில் இருந்தது. ஆசிரியர்களிடையே அச்சத்தை உருவாக்க பார்க்கிறீர்களா?

வாக்காளர் பட்டியல் திருத்த பணி முக்கியமானது என்றாலும், மாணவர்களின் கல்வி உரிமைக்கும், தேர்தல் பணிக்கும் இடையே சமநிலையை பேணுவது அவசியம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link