மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை உயர்த்தக் கூடாது, காசில்லா சிகிச்சையை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ​ஓய்வூதியர் சங்கங்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திருத்தங்களுடன் மீண்டும் வெளியிட வேண்டும், மருத்துவக் காப்பீட்டு ப்ரிமியத் தொகை உயர்வைக் கைவிட வேண்டும், காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், மாவட்ட அளவிலான குழு பரிந்துரைக்கும் மருத்துவ சிகிச்சைச் செலவு முழுவதையும் வழங்க வேண்டும், மருத்துவமனைகள் ஓய்வூதியர்களிடம் முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மேற்கு, ஸ்ரீரங்கம் மற்றும் கிழக்கு வட்டங்கள் சார்பில் இன்று (28.07.2026) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். அய்யப்ப நகர் கிளைச் செயலாளர் ராஜாராமன் வரவேற்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் துளசிராமன், மாவட்டத் துணைத் தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனமூர்த்தி, அய்யப்ப நகர் கிளைத் துணைத் தலைவர் கல்யாணராமன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.மனோகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் பேசினர். ​நிறைவாக, மாவட்டத் துணைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.
​
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
